Tuesday, 28 October 2014

கால பைரவர்
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை மிக சக்தி வாய்ந்த கால பைரவ தன்மை பற்றியது.நற்பலன்களோ கெடு பலன்களோ ஜோதிடத்தை பொறுத்தவரை காலத்தால் ஏற்படுபவைதான்.இந்த காலம் என்பதை உணர்வது மனம்,உடல், இவை இரண்டையும் இயக்குகிற கதி என்கிற மூச்சு.இம்மூன்றும்தான். இம்மூன்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஒன்றில்லாமல் ஒன்று என்பது இயலாத காரியம்.இம்மூன்றும் இரண்டு நிலைகளில் வேலை செய்கிறது நம்முள். 1. ஸ்தூலம் என்ற வெளி நிலை சூட்சுமம் என்கின்ற உள்நிலை.மேற்கூறிய மனம் உடல், மூச்சு மூன்றும் நமக்கு 5 விதமான செயல் தன்மைகளை வழங்கி இருக்கிறது. 1.விழிப்பு நிலை(நாம் இயங்குதல்) 2,,கனவு நிலை ( எண்ணங்களின் போக்கில் போதல் அல்லது நிலைத்தல்)3.உறக்க நிலை (இறப்பு நிலை),4.துரிதம் (விழிப்புணர்வோடு கூடிய மனமற்ற நிலை)5.துரிதாதிதம்( ஏதுமற்ற நிலை). இதில் 5 நிலை ஞானிகலுக்கும் சித்தர்களுக்கும் கை கூடுகிற நிலை.
ஏதும் இல்லா நிலை என்பது சோல் என்ற உயிர் நிலை மட்டுமே. இப்பிரபஞ்சமே உயிர்நிலை தான், அனைத்திலும் பரவி நிற்ப்பது அந்நிலையோடு சேர்ந்து இருத்தல் தான் 5 ம் நிலையான துரிதாதிதம்.1,2,3, நிலைகளை நாம் தினமும் தினசரி வாழ்க்கையில் பார்த்தும் அனுபவித்தும் வருகிறோம். 4 ம் நிலை துரித நிலை, இது மிக பெரிய அளப்பரிய சக்திகளை கொண்டிருக்கிற நிலை,மனம்தான் நமக்கு காலத்தை உணர்த்துவது,காலத்தில் நடக்கும் செயல்களுக்கு பொறுப்பும் மனம்தான்.மனம்தான் நமக்கு எவையெல்லாம் சாதகமோ அதை நற்செயல் என்றும் பாதகங்களை கெடுபலன்,கெடுசெயல் என்று பிரித்தாள்கிறது. இம்மனம் இல்லாதபோது அதன் செயல்களும் இருக்க போவதில்லை அல்லவா? நல்லது கெட்டது என்ற பிரித்தாளும் விசயங்களும் நம்முள் நடக்க முடியாததுதானே? இந்நிலைக்கு ஒருவர் போகிறபோது காலம் எங்கே இருக்கும்,காலத்தை உணர்த்துகிற மனதை கடந்த நிலை, .எண்ணம் இல்லாதபோது மனம் இல்லை மனம் இல்லையெனில் இயக்கம் இல்லை இயக்கம் இல்லையெனில் விளைவுகளும் இல்லை,இயக்கமும் விளைவுகளும் இல்லையெனில் உடலின் தேவை இல்லை, உடல் தேவை,மன தேவை இல்லாதபோது இவைகளை இயக்குவதற்கு அச்சாக இருக்கிற மூச்சுக்கும் வேலை இல்லைதானே? சராசரி மனிதனுக்கு 21,600 சுவாசம் ஒரு நாளைக்கு ஏற்படும் இந்த சுவாச கதியை வைத்துதான் அனைத்து காலங்களும் கணிக்கப்பட்டவை. இதை பற்றி உடல் சக்கரங்களை பற்றி எழுதும்போது எழுதுகிறேன்.இந்த 21,600 சுவாசம் துரித நிலையில் இருக்கும் பொழுது 800 முதல் 5,000 ஆக குறையும்.அது துரிதநிலையின் தீவிரத்தை பொறுத்தது.
இதை விட மிக முக்கியமான ஒன்று மனதை நாம் கடப்பதற்கு பெரிய மலை கல்லாக இருப்பது மனதின் சத்தமே அதாவது பேச்சு (பேச்சு என்பது இங்கே வெளியில் வாய்திறந்து வெளியில் பேசுவது அல்ல மனதின் உள்ளே இடைவிடாது குரைத்து கொண்டே இருக்கிற குரல்) அப்பேச்சு அடங்குகிற போது மனது தானாக அடங்குவதை தியான பயிற்சியில் இருப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள். துரித நிலையில் இருக்கும் போது பிரபஞ்சசக்தி நம்மை இயக்கும். அந்த அளப்பெரிய சக்தி காலத்தை கடந்து நம்மை கொண்டு செல்லும் ஒரு புள்ளியில் மையத்தில் நம்மை கொண்டு சேர்க்கும் அல்லது மையத்தில் வைத்து நம்மை இயக்கும். இந்த துரிதநிலை தான் கால பைரவர்.
உலகில் மனிதர்கள் சந்திக்கின்ற அனைத்து கஷ்டங்களுக்கும் பரிகாரமாக கால பைரவரை வழிபட சொல்வார்கள்.அஷ்டாமதிபதி,6 ம் அதிபதி திசை நடக்கின்ற காலங்களிலோ அல்லது கோச்சரத்தில் அஷ்டமா ஸ்தானத்தில் பாப கிரகங்கள் பயணிக்கிற காலங்களோ இந்த கால பையரவ வழிபாடுகள் பெரிய மாற்றங்களை கொடுக்கும் .காலபைரவ வழிபாட்டுத்தலங்களில் அத்தகைய சக்தியை நிலைநிறுத்தி வைத்திருப்பார்கள் அச்சக்தி தொடர்ந்து செயல் படுவதற்கு உண்டான சப்தங்களான மந்திரங்களும் அச்சக்தியை நம்முள் செலுத்தும் பொருள்களை தான் பயன்படுத்துவார்கள். மனதில் குறைக்கின்ற குரலான நாயை வாகனமாக்கி காலத்தை கடந்து இருக்கிற நிலையை நாம் சிறிது நேரமாவது உணருகிறபோது நம் கஷ்டங்களிலான அழுத்தம் சிறிது விடுபட்டு நம்மை சிறிது நேரமாவது பிரபஞ்ச சக்தியோடு இருக்க வைக்கும் இந்த காலபைரவ வழிபாடு. பிரபஞ்ச சக்தி நாம் கஷ்டங்களிலிருந்து விடுபடவும்,அல்லது சிரமங்களும் வேதனைகளும் பாதிக்காத ஒரு நிலையை நமக்கு கொடுக்கும். உணர்ந்து பாருங்கள் .
காலபைரவ தன்மை எழுத வேண்டுமென்று நெடுநாளாய் தோன்றியும் எழுத முடியாமல் வேலைகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருந்தன. என்னை இன்று இயக்கி இதை எழுத வைத்த என்னுள் என்றும் இருக்கிற என் குரு நாகாவை வணங்கி பதிகிறேன். இந்த உன்னதநிலையை உணர்ந்து பாருங்கள் இதுவும் ஒரு ஈஸ்வர நிலைதான்.மனதை கடந்து போகிற அனைத்து நிலைகளுமே ஈஸ்வர நிலைதான் உணருங்கள் நலம் பெறுங்கள் இன்னும் வரும். .......... அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment